ஒன்றரை நூற்றாண்டு காலமாக இலங்கை மக்களுக்கு மிக நெருக்கமாகவும், ஓர் அரச நிறுவனமாகவும் தனது கடமைகளை மேற்கொண்டு வரும் இலங்கை பொலிஸ் துறை, 1866 செப்டம்பர் 03ஆம் திகதி ஜி.டபிள்யூ.ஆர். கெம்பல் அவர்கள் நாட்டின் முதல் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதிலிருந்து 2025 செப்டம்பர் 03ஆம் திகதி வரை 159 ஆண்டுகளைக் கடந்த பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த நீண்ட வரலாற்றுப் பயணத்தில், பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட சவால்களையும் தடைகளையும் வெற்றிகரமாக மேற்கொண்டு, நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்டும் பணியில் தொடர்ந்து பொலிஸ் துறை முன்னிலை வகித்து வருகிறது. இவ் வரலாற்றுச் சிறப்பை நினைவுகூரும் வகையில், 159வது பொலிஸ் ஆண்டு விழா 2025 செப்டம்பர் 03ஆம் திகதி மாலை, கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில், பம்பலபிட்டி பொலிஸ் மேலதிகப் படை தலைமையக விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்: · பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன · பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜயபால · கௌரவ பிரதி அமைச்சர் சுனில் வட்டகல · ஜனாதிபதி செயலாளர் கௌரவ கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க · பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்சல்) கௌரவ சம்பத் துய்யகொன்னா · பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்) கௌரவ ரவீ செனவிரத்ன · முப்படையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் முக்கிய அம்சங்கள்: கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்பானது 05 குதிரைப் படையணிகளுடன் 05 சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் தலைமையின் கீழ் ஆரம்பமாகியது. விழாவுக்கு முன்னிலை வகித்த பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், வரவேற்புரை நிகழ்த்துவதற்கு முன், கடமையின் போது உயிர் தியாகம் செய்த 3050 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூரப்பட்டனர். நீண்ட காலமாக பதவி உயர்வுகளை எதிர்பார்த்துக் காத்திருந்த 4254 உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. சமீபத்தில் வெளிநாட்டில் வைத்து திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதியின் கைகளால் ஜனாதிபதி பொலிஸ் வீரதையுப் பதக்கம் பெற்றனர். விழாவில் உரையாற்றிய கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கை பொலிஸ் துறையின் சேவையை பாராட்டியதுடன், அதில் ஈடுபட்ட அதிகாரிகளை ஊக்குவித்து, அவர்களது எதிர்கால பணி வெற்றிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதனையடுத்து, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், விழாவில் கலந்துகொண்டதற்காக ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினார். விழா நிறைவில், பொலிஸ் மேற்கேத்திய இசைக்குழு, விசேட அதிரடிப்படை, பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, பொலிஸ் கலாச்சாரப் பிரிவுகள் இணைந்து தங்களது திறமைகள், செயல் திறன் மற்றும் பண்பாட்டுக் காட்சிகளை காண்பித்தனர். இவை நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொருவரிடமும் பாராட்டையும் பெற்றன.