சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள், அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடன், கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 37 ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, 2025 ஆகஸ்ட் 14ஆம் திகதி, கொழும்பு 02இல் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் புதிய பொலிஸ் மா அதிபராக சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
37ஆவது பொலிஸ் மா அதிபராக அவருடைய நியமனம், இலங்கைப் பொலிசிற்கான ஒரு சிறப்பான மைல்கல்லாகவே கருதப்படுகிறது. அதன் காரணம், இலங்கைப் பொலிசில் ஆட்சேர்ப்பு செய்யும் மூன்று நிலைகளிலும் இணைந்து பயிற்சி பெற்ற ஒரே அதிகாரியாக இருப்பதோடு, பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை ஆகும்.
1969 பெப்ரவரி 09ஆம் திகதி பிறந்த பிரியந்த லியன் ஆரச்சிகே சமன் பிரியந்த அவர்கள், தொடாங்கொடை நேஹின்ன முதல்நிலைப் பாடசாலையில் தொடக்கக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை களுத்துறை ஞானோதயம் மகா வித்தியாலயத்தில் கற்றுக்கொண்டார்.
கல்விக் கற்கும் போதே இலங்கைப் பொலிஸ் துறையை தனது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்து, 1988 மே 20 ஆம் திகதி கனிஷ்டப் பொலிஸ் பதவியில் பொலிஸ் சேவையில் சேர்ந்தார்.
மேலும், 1990ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்குத் தகுதிப்பெற்றார். 1992 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகர் பதவியில் நேரடி ஆட்சேர்ப்பில் பயிலுநர் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்தார்.
பொலிஸ் சேவையில் இருந்தபோதே, 1993 ஆம் ஆண்டு சட்டப் பீடத்தில் சட்டப் பட்டப்படிப்பை ஆரம்பித்து, 1998 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நிறைவு செய்தார். 1999 ஆம் ஆண்டு தனது சட்டப் பட்டப்படிப்பை அடிப்படையாகக் கொண்டு, பயிலுநர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நேரடியாக பொலிஸ் சேவையில் இணைந்து, அடிப்படை பயிற்சியின்போது கௌரவ உயர் நீதிமன்றத்தில் பிரசித்த நொத்தாரிசாக, சத்தியப்பிரமாண ஆணையராக, மற்றும் சட்டத்தரணியாகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவம் தொடர்பான வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
2007ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியட்சகராகவும், 2012ஆம் ஆண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகவும், 2016 ஆம் ஆண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், 2020ஆம் ஆண்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திரு. பிரியந்த வீரசூரிய அவர்களின் 37 வருட சேவையில், பல செயல்பாட்டு பிரிவுகளில் பணிப்பாளராகவும், பிராந்திய மற்றும் மாகாணங்களுக்குப் பொறுப்பான அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். நிர்வாகக் கடமைகளிலும் மேலதிக பொறுப்புகளிலும் திறமைசாலியாகவும் அனுபவமிக்கவராகவும் திகழ்கிறார்.
2024 செப்டெம்பர் 27ஆம் திகதி, பதில் பொலிஸ் மா அதிபராக அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடன் கௌரவ ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டார்.
பொலிஸ் சேவையின் பல்வேறு தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, பல திட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்தியுள்ளார். அதன் விளைவாக, பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, சீருடைகள், விளையாட்டு சீருடைகள், பாதணிகள், மற்றும் விசேட கடமைக்கான படுக்கைப் பொருட்கள் போன்றவை வழங்குவதற்கான முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபராகச் செயல்பட்ட காலத்தில், சர்வதேச பொலிசாருடன் இராஜதந்திர மட்டத்தில் நற்பிரதி பேணியதுடன், வெளிநாடுகளில் குற்றவாளிகளை கைது செய்து நாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
கனிஷ்ட மற்றும் பரிசோதகர் நிலைகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள், பதவி உயர்வுகளில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வுகள் என்பவற்றையும் அவர் முன்னெடுத்துள்ளார்.
மேலும்:
• பொது மக்களுக்கான உதவிச் சேவைகள்
• பொது மக்கள் குறைகேள் தினங்களை நடாத்தல்
• Whatsapp இலக்கத்தை அறிமுகப்படுத்தல்
• Gopay திட்டம்
• மாகாண அளவிலான குற்ற விசாரணைப் பிரிவுகள்
• பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவைத்தர மேம்பாடுகள்
என்றவையும் செயல்படுத்தியமை சிறப்பம்சமாகும்.
மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளை முறையாக கண்காணித்து பலவீனமான உத்தியோகத்தர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஊழல் செய்யும் உத்தியோகத்தர்களை சேவையிலிருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காகவும் பொலிஸ் துறையினை மேம்படுத்துவதும் இவரின் நீண்டகால திட்டமாகும். அதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுக்கமைய எளிய தீர்வுகளுக்குப் பதிலாக திருமணமான பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்களை அதிகரிப்பதற்காகவும் புதிய குடியிருப்புகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான நீண்டகால தீர்வினை பெற்றது சிறப்பான பணியாக கருதப்படுகின்றது.
பிரியந்த வீரசூரிய அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் உத்தியோகத்தர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி பாடநெறியும், பங்காளதேஷில் நீண்ட தூர பாதுகாப்பு பயிற்சிப் பாடநெறியும், வியட்நாம் மற்றும் அவுஸ்திரேலியாவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் முகாமைத்துவ பயிற்சியும் தாய்லாந்தில் முகாமைத்துவம் மற்றும் நிருவாகப் பயிற்சியும், மலேசியாவில் செயல்முறைப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் தொடர்பான பாடநெறியும், ரஷ்யாவில் பாதுகாப்பு தொழிநுட்பம் தொடர்பான பயிற்சி நெறியும், அமெரிக்காவில் White Collar Crime தொடர்பான பயிற்சி நெறியும், றோயல் மலேசியா பொலிசில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தலைமைத்துவ பாடநெறிகள் உள்ளிட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயிற்சி பாடநெறிகளையும் அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
மேலும், 2008 இலிருந்து 2011 வரை கிழக்கு திமோர் மற்றும் ஹைட்டியில் ஐக்கிய நாடுகள் நடவடிக்கைகளுக்கு தனது பங்களிப்பினையும் வழங்கியுள்ளார்.
இலங்கை பொலிசில் பல்வேறு பதவிகளில் தனது கடமையினை வகித்தது மாத்திரமின்றி உண்மையாகவும் நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய திறமையான உத்தியோகத்தரான சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் இந்நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.