சகல நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு வடக்கு பிரிவுக்கான சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தின் புதிய கட்டடம், மோதரை பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு, இலங்கை பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்று முடிவடைந்தது.
இப் புதிய கட்டடம், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் தனித்தன்மை பாதுகாக்கப்படும் சூழலில் குற்றச்செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் தடுக்கும் நடவடிக்கைகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை பெறும் சூழல் உருவாக்கப்படுவதற்காகவும் இப் பணியகம் நிறுவப்பட்டுள்ளது.
இத்திட்டம், ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உதவிப் பிரிவின் செயலாளர் நாயகம் மற்றும் பிரதானி Ohashi Kenji பிரதம விருந்தினராக இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த புதிய கட்டடத்தில்:
• தாய்மார்கள் தங்களது குழந்தைகளைத் தாய்ப்பால் கொடுக்கக்கூடிய தனியுரிமையுடன் கூடிய இடங்கள்
• சிறுவர் பூங்கா
• பெண்களுக்கு ஓய்வறைகள்
போன்ற பல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மேல் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, கொழும்பு வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் புஷ்பகுமார, சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி H.W.I.S. முத்துமால, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.