இலங்கையில் சர்ச்சைக்குரிய குற்றங்கள் மற்றும் தீர்மானிக்கப்படாத பழைய குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நோக்கில், இலங்கை பொலிஸின் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம் (CCIB) தனது செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்த புதிய அமைப்பு, சட்டவிரோத சொத்துக்கள், மனித படுகொலைகள், திட்டமிட்ட குற்றங்கள், கணினி குற்றங்கள், மனித கடத்தல், விற்பனை மற்றும் கடற்சார் குற்றங்கள் உள்ளிட்ட பலவகை குற்றங்களை விசாரிக்கப்படுகின்றது. இதன் மூலம், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு நேரடியாக உதவுவதோடு, நாட்டில் இயங்கும் குற்ற வலையமைப்புக்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது இப்பணியகத்தின் பிரதான நோக்கமாகும்.
இப்பணியகத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கவும், விசாரணைகள் திறம்பட மேற்கொள்ளவும், நாராஹென்பிட்டி தொழில் திணைக்களக் கட்டடத்தில் தற்போது இவ் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.
பணியகத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா 2025 செப்டம்பர் 4ஆம் திகதி நடைபெற்றதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பத்தினாயக, மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரண்மல் கொடிதுவக்கு, மற்றும் பணியகத்தின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவசம் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.