இந்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உள்நாட்டு தொழிலாளர்கள், தங்களது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலைகள் மற்றும் அவர்கள் சேவையளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பயிற்சிகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
Jetwing Travels (Private Limited) நிறுவனத்தின் அழைப்பின் பேரில், பொலிஸ்மா அதிபர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எஃப். யூ. வுட்லர் அவர்களின் பங்கேற்புடன், இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வு 2025.10.28 அன்று காலை Jetwing Travels (Private Limited) நிறுவன வளாகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சுற்றுலாத்துறையில் பாதுகாப்பு தொடர்பான அண்மைக்கால சம்பவங்களை விளக்கி, அதனடிப்படையில் எடுக்கக்கூடிய சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்க உரையொன்றை வழங்கினார்.
இந்த நிகழ்வின் மூலம் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வழிகாட்டிகள், வாகன விநியோகத்தாரர்கள், ஓட்டுநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவக நிர்வாகிகள் மற்றும் தொடர்பாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் விரிவான விழிப்புணர்வைப் பெற்றனர்.