2026 ஆம் ஆண்டு புத்தாண்டின் கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வை முன்னிட்டு, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில், பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரிகள் ஜனவரி முதலாம் திகதி காலை பொலிஸ் தலைமையக வளாகத்தில் ஒன்றிணைந்து, அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரசுச் சேவைக்கான சத்தியப்பிரமாணம் / உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
அந்நிகழ்வின் போது, பொலிஸ்மா அதிபர் அவர்கள் இணையவழி (Online) மூலம் நாட்டின் அனைத்து பொலிஸ் பிரிவுகளின் அரச உத்தியோகத்தர்களாக பொதுமக்கள் நட்பு கொண்ட சேவையை உறுதியுடன் முன்னெடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து அமைதியான சூழலை பேணுவதற்காக பாராட்டத்தக்க முறையில் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றவும் அறிவுறுத்தினார்.
தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்களை நினைவுகூர்ந்த பின்னர், பாரம்பரிய முறையில் பால் சாதம் மற்றும் இனிப்புகளுடன் கூடிய தேநீர் விருந்தோம்பல் அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் அனைத்து அதிகாரிகளின் நலனுக்காக நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பொலிஸ்மா அதிபர் அவர்கள் விளக்கமளித்து, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நிர்வாகப் பொறுப்பிலுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன அவர்கள், மேல் மாகாணப் பொறுப்பிலுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்கள் உள்ளிட்ட இலங்கை பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், அதேபோல் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபருக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.