Menu

பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகம்

இலங்கை தீபகமானது ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில் கி.பி 1795 முதல் 1948 வரையிலான காலக்கட்டத்தில் அதாவது, 1861 ஆம் ஆண்டில் பெருமைமிக்க பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆரம்பத்தில் திட்டமிடப்படாத சேவையாக இருந்த இப்பொலிஸ் அமைப்பு, 1866 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி, இலங்கையின் முதல் பொலிஸ்மா அதிபர் ரொபட் வில்லியம் கெம்பல் அவர்களின் காலத்தில் மறுசீரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1867 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.

அதன் பின்னர், 1867 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மருதானை முஸ்லிம் பள்ளிவாசல் முன்பாக மெனுவல் பிரனாந்து என்பவருக்குச் சொந்தமான காணியை அவரிடமிருந்து கொள்வனவு செய்து, அதில் பொலிஸ் தலைமையகம் நிறுவப்பட்டு, 1869 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பொலிஸ் சேவை அரச மற்றும் தனியார் சொத்துக்களைக் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கப்பட்டது. 1867 இல் யாழ்ப்பாணம் நல்லூரில் ஏற்பட்ட கலவரம், 1870 இல் மருதானையில் 14 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம், 1883 இல் கொட்டாஞ்சேனையில் பௌத்தர் மற்றும் கத்தோலிக்கர்களிடையிலான மோதல் போன்றவற்றில் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டன.

இவ்வாறான கலவரங்கள், போராட்டங்கள் மற்றும் நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகள் அதிகரித்ததனால், பொலிசாரின் செயல்பாடுகள் சவாலானதாக மாறியது. இதனை உணர்ந்த அப்போதைய பொலிஸ்மா அதிபர், சேவையில் இருந்த 25 பொலிஸ் உத்தியோகத்தர்களுடன், வெளியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 25 துடிப்பான நபர்களை இணைத்து, அவசரச் சூழ்நிலைகளுக்காக ஒரு சிறப்புப் படையை அமைத்தார். இக்குழுவை வழிநடத்துவதற்காக பொலிஸ் பரிசோதகர் மாஷல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களை மருதானை பொலிஸ் தலைமையத்திற்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் தங்கவைக்கப்பட்டனர்.

இடப்பற்றாக்குறை காரணமாக, கியூ வீதியில் புதிய தங்குமிடமொன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, அவசரச் சந்தர்ப்பங்களில் அழைப்பதற்காக முரசு ஒலிக்க வல்ல நபர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். மேலும், பொலிஸ் தலைமையத்திற்கு இணையான கட்டடம் ஒன்று அங்கு நிர்மாணிக்கப்பட்டு, உதவி அத்தியட்சகர் தலைமையில் “டிப்போ பொலிஸ்” என்ற பெயரில் 1892 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட டிப்போ பொலிஸ் பணிகள் சிறப்பாக முன்னேற்றமடைந்தன.

தற்போது பொலிஸ் மேலதிகப்படைத் தலைமையகம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்  இவ்விடத்தில் 1923 ஆம் ஆண்டில் 286,000.00 ரூபாய்  நிதி ஒதுக்கீட்டுடன், புதிய இரண்டு மாடிக் கட்டடங்கள் இரண்டு நிர்மாணிக்கப்பட்டு, 1925 ஆம் ஆண்டில் இலங்கை பொலிஸ் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது களுத்துறை பொலிஸ் வித்தியாலயம் அமைந்துள்ள காணியில், ராஜகீய விமானப்படைக்கு  சொந்தமான முகாம் இருந்ததாக கூறப்படுகின்றது, 1948 ஆம் ஆண்டில் அந்த முகாம் அகற்றப்பட்டு, பொலிஸ் வித்தியாலயம் அவ்விடத்தில் நிர்மாணிக்கப்பட்டது. மேலும், மருதானையிலிருந்த டிப்போ  பொலிஸ் இவ்விடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

1958 இல், சிறிய துப்பாக்கிகளிலிருந்து யுத்த ஆயுதங்கள் வரை கையாளும் ஆயுத களஞ்சியசாலையாகவும் இவ்விடம் விரிவாக்கப்பட்டது. விளையாட்டுப் பிரிவு, இசைக்குழு, கலாச்சாரம் மற்றும் முதலுதவி போன்ற பிரிவுகளும் இத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

1962 ஆம் ஆண்டு அரசிற்கு எதிரான சதித் திட்டங்களும் கலவரங்களும் ஏற்பட்டபோது, அப்போதைய டிப்போ பொலிசிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக பணிப்புரிந்த டி.எச். கெலாட் என்பவரின் தலைமையில் கலகத் தடுப்பு பிரிவு மறுசீரமைக்கப்பட்டது. வலிமைமிக்க 100 பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஐந்து கலகத் தடுப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் சாஜன்ட் மேஜர் சரப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

1971 இல் ஆயுதப் போராட்டத்தின் போது, இவ்வுறுப்பினர்கள் ஆயுதமேந்திய கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பல நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர், 1977 ஜூலை 01 ஆம் திகதி  “டிப்போ பொலிஸ்” என்ற பெயர் “பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகம்” எனப் பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைவரும் “அத்தியட்சகர்” என்பதிலிருந்து “கட்டளையிடும் அதிகாரி” என மாற்றம் செய்யப்பட்டார்.

இலங்கை பொலிசின் முதலாவது கட்டளையிடும் அதிகாரி, இத்தலத்தின் கட்டளையிடும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொலிசின் முதலாவது கட்டளையிடும் அதிகாரியாக  பொலிஸ் மேலதிகப்படைத் தலைமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 1980-களில், கலகத் தடுப்பு பிரிவின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், “விஜய” மற்றும் “கெமுனு” எனும் பெயர்களில் விடுதிகள் கட்டப்பட்டன. மேலும், தென்னை ஓலைகளால் ஆன நான்கு விடுதிகளும் அமைக்கப்பட்டன.

1983 இல், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கபூர் தலைமையில், நாராஹேன்பிட்ட அபயாராம விகாரை அருகே, கலகத் தடுப்பு கடமையிலிருந்த பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் வழக்கு விசாரணையில் இது “நியாயமான கொலை” எனவும் நிரூபிக்கப்பட்டது.

1892 இல் ஆரம்பிக்கப்பட்டு, நூற்றாண்டைக் கடந்துள்ள இத்தளம், தற்போது பொது கலவரங்கள் மற்றும் கிளர்ச்சிகளை கட்டுப்படுத்தும் நவீன அமைப்பாக வளர்ந்துள்ளது.

இதன் கீழ் செயல்படும் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் இசைக்குழுப் பிரிவுகள் முக்கிய பங்களிப்புகள் வகிக்கின்றன. மேலும், “பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு” தற்போது  பொலிஸ் மேலதிகப்படைத் தலைமையகத்தின் கீழ் உப அலகாக நடைமுறையில் உள்ளது.

1993 இல், இதன் நிருவாகம் மேலும் விரிவடைந்ததால், இது ஒரு தனித்த பொலிஸ் பிராந்தியமாக நிறுவப்பட்டது. முதல் பிரதிப் பொலிஸ்மா அதிபராக எம்.டி. பெரேரா அவர்கள் பதவியேற்றார். தற்போது ஏ.ஜி.ஜே. சந்திரசேன அவர்கள் 26 வது பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும்,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி. ஆர்.ஏ. தர்ஷிகா குமாரி அவர்கள் 71 வது கட்டளையிடும் அதிகாரியாகவும் முதலாவது பெண் கட்டளையிடும் அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Scroll to Top