Menu

37 ஆவது பொலிஸ்மா அதிபர்

சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய

இலங்கை பொலிஸ் சேவையில் மூன்று நிலைகளிலும் ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்டு, 37 ஆண்டுகள் சிறப்பாக கடமையாற்றியதுடன், பொலிஸ்மா அதிபர் என்ற உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பொலிஸ் உத்தியோகத்தராக வரலாற்றில் இடம் பிடித்த சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், 2025 ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி காலை வேளையில் பொலிஸ் தலைமையகத்தில் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

1969 பெப்ரவரி 09 ஆம் திகதியன்று பிறந்த பிரியந்த லியன ஆரச்சிகே சமன் பிரியந்த, தொடாங்கொடை நேஹின்ன முதல்நிலைப் பாடசாலையில் அடிப்படை கல்வியைப் பெற்று, பின்னர் களுத்துறை ஞானோதயம் மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியையும் பயின்றுள்ளார்.

கல்விக் கற்கும் போதே இலங்கை பொலிஸ் துறையை தனது வாழ்க்கைப் பாதையாக தேர்ந்தெடுத்து, 1988.05.20 ஆம் திகதி பொலிஸ் சகாப்தத்தில் கனிஷ்ட பொலிஸ் பதவியில் சேர்ந்துள்ளார்.

மேலும், 1990ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்திற்கு தகுதி பெற்றதுடன், 1992 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பின் மூலம் பயிலுநர் உப பொலிஸ் பரிசோதகராகவும் இணைந்துள்ளார்.

பொலிஸ் சேவையில் இருக்கும் போதே 1993 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்தில் சட்டப் பட்டப்படிப்பினை பயின்று, 1998 ஆம் ஆண்டு வெற்றிகரமாக அதை நிறைவு செய்தார்.

1999 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு பரீட்சையில் சித்தியடைந்து, கௌரவ உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

அதற்கமைய தனது பட்டப்படிப்பினை அடிப்படை தகுதிநிலையாக பயன்படுத்தி, 1999 ஆம் ஆண்டு பயிலுநர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நேரடியாக பொலிஸ் சேவையில் இணைந்து அடிப்படை பயிற்சியினை மேற்கொண்டார்.

பின்னர்,

  • 2007 ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியட்சகராகவும்,
  • 2012 ஆம் ஆண்டு சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகராகவும்,
  • 2016 ஆம் ஆண்டு பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும்,
  • 2020 ஆம் ஆண்டு சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளார்.

இக்காலகட்டத்தில்,

  • 2015 ஆம் ஆண்டு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  சட்ட முதுமாணிப் பட்டத்தையும்,
  • 2020 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித வள முகாமைத்துவம் தொடர்பான வணிக நிருவாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

திரு. பிரியந்த வீரசூரிய அவர்களுடைய 37 வருட சேவைக் காலத்தில், பல செயல்பாட்டு பிரிவுகளில் பணிப்பாளராகவும், பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகராகவும், பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும், மற்றும் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் கடமையாற்றியதுடன், நிர்வாகக் கடமைகள் மற்றும் மேலதிக கடமைகளில் திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த உத்தியோகத்தராகவும் செயல்பட்டார்.

சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள், 2024 செப்தெம்பர் 27ஆம் திகதி பதில் பொலிஸ்மா அதிபராக அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடன், கௌரவ சனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டார்.

பொலிஸ் சேவையிலுள்ள பல்வேறு கடமைகள் மற்றும் அதற்கு தேவையான உட்கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, பல திட்டங்களையும் தீவிரமாக செயல்படுத்தினார்.

அதேபோன்று, கனிஷ்ட மற்றும் பரிசோதகர் நிலைகளில் புதிய ஆட்சேர்ப்புகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும், கனிஷ்ட, பரிசோதகர் நிலைகள் மற்றும் நிறைவேற்றுச் சேவையில் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளை வழங்கும் முறைகளில் (SOR) அனுமதியைப் பெற்றதுடன், பதவி உயர்வுகளிலுள்ள சிக்கல்களை தீர்த்து அது தொடர்பான  நடவடிக்கைகள் எடுப்பதற்கான பணிகளையும் ஆரம்பித்துள்ளார்.

பொதுமக்களுக்காக பொலிஸ்மா அதிபர் உதவிச் சேவைகள், பொதுமக்கள் குறைகேள் தினத்தையும் நடாத்திவருகின்றமை, பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்காக Whatsapp தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியமை, Gopay ஊடாக வீதி ஒழுங்குமுறை மீறியமைக்கான தண்டப் பணத்தை செலுத்தும் முறைமையை ஆரம்பித்தமை மற்றும் மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகள் ஆரம்பித்தல், பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையின் தரத்தை உயர்த்துதல் போன்றவை இவரின் முக்கிய சேவையாக கருதப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளை முறையாக கண்காணித்தல், சேவையில் பலவீனமான உத்தியோகத்தர்களை அடையாளம் காணுதல், மற்றும் ஊழல்களுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களை பதவியிலிருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன், இலங்கை பொலிசின் முன்னேற்றத்திற்காக குறுகிய காலத்தில் தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளார்.

திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள்,

  • அமெரிக்கா – உத்தியோகத்தர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் White Collar Crime,
  • பங்களாதேஷ் – தொலைதூர பாதுகாப்பு,
  • வியட்நாம், அவுஸ்திரேலியா – சட்ட நடைமுறைப்படுத்தல் மற்றும் முகாமைத்துவப்,
  • தாய்லாந்து – நிர்வாகம் மற்றும் முகாமைத்தும்.
  • மலேசியா – செயல்முறைப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்,
  • ரஷ்யா – பாதுகாப்பு தொழிநுட்பம்,
  • றோயல் மலேசியா பொலிஸ் – செயற்கை நுண்ணறிவு மற்றும் தலைமைத்துவம்
    ஆகிய பயிற்சி நெறிகளை உள்ளடக்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

2007 – 2008 காலப்பகுதியில் கிழக்கு திமோரிலும், 2010 – 2011 காலப்பகுதியில் ஹைட்டியில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தனது பங்களிப்பினை சிறந்த முறையில் வழங்கியுள்ளார்.

மேலும், இலங்கை பொலிஸ் மீதான நம்பிக்கையற்றிருந்த பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்துவதில் அக்கறையுடன் செயல்பட்டு வருவதுடன், அரசியல் அழுத்தங்களின்றி சுதந்திரமான சுயாதீன பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்தில், இலங்கை பொலிஸ் செயற்பணியான குற்றங்கள் மற்றும் வன்செயல்கள் பற்றிய பயமின்றி, நம்பிக்கையுடன் வாழக்கூடிய ஒரு அமைதியான சூழலை உருவாக்குதல்” எனும் இலக்கை செயற்படுத்துவதற்காகவும், சகல பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்காகவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றார்.

இலங்கை பொலிஸ் துறையில் பல்வேறு பதவிகளை வகித்து, உண்மையாகவும், நேர்மையாகவும், பொறுப்புணர்வுடன் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய திறமையான, மதிப்புமிக்க பொலிஸ் உத்தியோகத்தராகவும் அறியப்படும் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள், தனது 37 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்யும் இவ்வாண்டில், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 37வது பொலிஸ்மா அதிபராக தனது கடமையை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Scroll to Top